கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய இரண்டு வட்டங்களுக்கு அருகே, அடர் வனப்பகுதிகளும், மிகப்பெரிய மூங்கில் காடுகளும் இருப்பதால் ஏராளமான வனவிலங்குகளுடன் 100க்கும் அதிகமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு தேடி இடம்பெயர்கிறபோது கூட்டத்திலிருந்து பிரியும் யானைகள் ஆக்ரோஷமாகவும், உணவு தேட முடியாமலும் இருக்கும் சமயங்களில் மனிதர்களை தாக்குகின்றன.
காட்டு யானைகள் கூட்டமாக இருப்பதைவிட, கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானையால் தான் மனித உயிரிழப்புக்கள் அதிகளவில் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட அலசட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 42). விவசாயப் பணி செய்துவரும் இவர், ஊருக்கு அருகில் உள்ள விளைநிலத்திற்கு சென்றுவிட்டு நேற்றிரவு வீடு திரும்பியபோது, ஒற்றைக் காட்டு யானை தாக்கி அவரை தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த திம்மராயப்பா தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.