தேனி:பெரியகுளம் அருகே பணிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயியை, திடீரென வந்த காட்டு மாடு தாக்கியதில், விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரையைச் சேர்ந்தவர் விவசாயி நாகேந்திரன் (50). இவர் இன்று காலையில் வழக்கம்போல் கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு பணிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கும்பக்கரை செல்லும் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நாகேந்திரன் மீது, மாந்தோப்பில் இருந்து வெளியேறிய காட்டு மாடு ஒன்று, திடீரென முட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "பெண் யானைகளிடம் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டால் தாக்கக்கூடும்"- கால்நடை மருத்துவர்கள் தரும் விளக்கம்!
அதனால், விவசாயி இருசக்கர வாகனத்துடன் நிலைகுலைந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதியினர், காட்டு மாடை விரட்டி விட்டு, பின்னர் படுகாயமடைந்த விவசாயி நாகேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது, காட்டு மாடு முட்டித்தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயி பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் காட்டு மாடுகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதாகவும், விவசாயிகளை தாக்கி வருவதாகவும், அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்