விருதுநகர்:காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, காடு அழிப்பு போன்ற பல்வேறு விசயங்களால் மனித-விலங்கு மோதல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காப்புக்காடுகளுக்குத் தொடர்பு இல்லாத விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாயத்தை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளால் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
தமிழ்நாட்டில் வன உயிரினங்களால் குறிப்பாக, யானை, காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கும் அதற்கான தீர்வினைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் விவசாயப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, அறிவியல் நிபுணர்கள், தன்னார்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் என மொத்தம் 19 நபர்கள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்று அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தமிழக வனத்துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது.
காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள சேதம்:
மனித-காட்டுப்பன்றி மோதல் குறித்த தமிழக வனத்துறையின் அறிக்கை (Document on Human-Wild pig conflict in Tamilnadu - Wildlife Policy Research - AIWC 2024) அளிக்கும் தரவுகளின்படி, '3 ஆயிரத்து 331 காட்டுப்பன்றி மோதல் சம்பவங்களில் 3,117 பயிர் சேதங்களும் (94.4%), 13 மனித இறப்புகளும் (0.39%) 161 மனித காயங்களும் (4.9%) 4 கால்நடை அழிப்புகளும் (0.1%), 6 சொத்து சேதங்களும் (0.2%) நிகழ்ந்துள்ளன என்கிறது.
காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை 23 விழுக்காடு, நெற்பயிர்கள் 19.9 விழுக்காடு, கரும்பு 10 விழுக்காடு, மரவள்ளிக்கிழங்கு 7.82 விழுக்காடு, மக்காச்சோளம் 9.5 விழுக்காடு, வாழைப்பழம் 4.6 விழுக்காடு, சோளம் 6 விழுக்காடு கடந்த ஓராண்டில் அழிவுக்குள்ளான பயிர்களாகும்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் தொல்லை மிகக் கடுமையாக உள்ளதென விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விவசாயம் கடும் பாதிப்பு:
அப்போது, திருச்சுழி அருகேயுள்ள கீழக்காஞ்சரங்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.போஸ்-யிடம் கேட்ட போது, "காட்டுப்பன்றிகளால் எங்கள் பகுதியில் நெற்பயிர் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. விளைந்த நெல் வயல்களுக்குள் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதம் செய்து விடுகின்றன. இதனால் வருமான இழப்பு ஏற்படுகிறது.
அதேபோன்று நிலக்கடலை விளைவிக்கும்போது கடும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக பலமுறை விருதுநகர் ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை" என வேதனை தெரிவிக்கிறார்.