சென்னை:சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ருக்மணி. இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் அந்த கடைக்கு சென்ற கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த இருவர் சில பொருள்களை வாங்கிவிட்டு, ருக்மணியிடம் பேச ஆரம்பித்துள்ளனர்.
அப்போது தங்களுக்குத் தங்க புதையல் கிடைத்து இருப்பதாகவும், இதனைக் குறைந்த விலைக்கு விற்பதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய ருக்மணியிடம் அசல் தங்கநகைகள் சிலவற்றைக் கொடுத்து, உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த நகைகளைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து நகைகளைப் பெற்றுக் கொண்ட ருக்மணி, அப்பகுதியில் உள்ள நகைக் கடையில் கொண்டு சென்று பரிசோதித்த போது அது தங்க நகைதான் என தெரியவந்துள்ளது. இதையடுத்து ருக்மணி மாண்டியா கும்பலிடம், "இந்த நகையை நான் பெற்றுக் கொள்கிறேன் எவ்வளவு விலைக்கு இதைக் கொடுக்கிறீர்கள்" என கேட்டு உள்ளார்.
இதே போல் எங்களிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன, ஆனால் குடும்ப கஷ்டத்தில் இருப்பதால் அதனை 6.5 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ருக்மணியிடம் 6.5 லட்சத்தை பெற்றுக் கொண்ட மாண்டியா கும்பல், மொத்த நகைகளைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் அவற்றை சோதனை செய்த பார்த்த போது அவை போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்மணி இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தாம்பரம் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சோதனை செய்தனர்.