சென்னை: இந்தியாவில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் ஆகஸ்ட் 30இல் தொடங்கி செப்டம்பர் 1 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக தீவுத்திடலை சுற்றி 3.5 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கார் பந்தயம் நடைபெறும் கொடிமரச்சாலையில் இந்திய ராணுவத்தின் அலுவலகம் இருப்பதால், ராணுவத்திடமிருந்து தடையில்லா சான்றும் பெறப்பட்டு கார் பந்தயம் நடைபெற தயாராக இருக்கிறது.
கார் பந்தயம் நடைப்பெறும் சாலைகள்: ஃபார்முலா 4 கார்பந்தயமானது, தீவு திடலில் இருந்து புறப்பட்டு கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்த சாலை வழியாக நேப்பியர் மேம்பாலம் வந்து மீண்டும் தீவுத்திடலை அடைவதை ஒரு சுற்றாக கணக்கிடப்படுகிறது.
இந்த கார் பந்தயமானது தீவுத்திடலில் தொடங்கி, கொடிமர சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி, அண்ணா சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று பின்னர் அண்ணா சாலையிலிருந்து சுவாமி சிவானந்தா சாலைக்கு வலதுபுறம் திரும்பி 1 கிலோ மீட்டர் தூரம் சென்று நேப்பியர் பாலம் அடைந்து மீண்டும் தீவு திடலை சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு வசதிகள்: கார் பந்தயத்திற்காக மூன்று 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலைகள் அகற்றப்பட்டு கார் பந்தயத்திற்கு ஏற்றவாறு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டது. குறிப்பாக கார்பந்தத்திற்காகவே, கார் பந்தயம் நடத்தும் நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது.
இந்த கார் பந்தயத்தை சாலையின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தயத்தை பார்க்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவித ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருக்கிறது.