தென்காசி:செங்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு 3 முறை 17 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட நிலையில், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில், சிலம்பம் விரைவு ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் அந்த சேவை தொடங்கியுள்ள நிலையில், தென் தமிழக ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிலம்பு எக்ஸ்பிரஸ்: தாம்பரம் - செங்கோட்டை இடையே (வண்டி எண்- 20681/20682) சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் மும்முறை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சிலம்பு எக்ஸ்பிரஸ் முதலில் 2013 ரயில்வே பட்ஜெட்டில் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயங்கும் என அறிவிக்கப்பட்டு, 22 ஜூன் 2013 அன்று தனது முதல் சேவையை வாரம் இருமுறை ரயிலாக சென்னை எழும்பூர் - மானாமதுரை இடையே தொடங்கியது. பின்னர் 5 மார்ச் 2017 முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. 25 பிப்ரவரி 2019 முதல் வாரம் இருமுறையிலிருந்து வாரம் மும்முறை ரயிலாக சேவை நாட்கள் அதிகரிக்கப்பட்டன.
அதன் பின்னர், ஏப்ரல் 15, 2022 முதல் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றப்பட்டு, தற்போது தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் நடைமேடை நீளம் பற்றாக்குறை காரணமாக 17 பெட்டிகளாகவே இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், தற்போது தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் கூடுதலாக 6 பெட்டிகள் இணைத்து மொத்தம் 23 பெட்டிகளாக இயங்குகிறது.
அதன்படி கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டியும், இன்று (நவ.27) முதல் 2025 ஜன.30 வரை இணைக்கப்பட உள்ளது. இதனை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.