தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சிறுபான்மை மாணவர்களுக்குத் தமிழ் பாடத் தேர்விலிருந்து விலக்கு! - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

10th public exam: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு, தமிழ் மொழிப்பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10th public exam
10th public exam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 10:41 PM IST

சென்னை: இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-இன், பிரிவு (3)-இன்படி 2006-2007-ஆம் கல்வி ஆண்டிலிருந்து அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.

2016-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் பகுதி-1-இல் தமிழ் மொழிப்பாடம் தேர்வெழுத வேண்டும் என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கு பகுதி IV இல் அவர்களது தாய்மொழியினை விருப்ப பாடமாக தேர்வெழுத நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பகுதி IV இல் பெறும் மதிப்பெண்களை பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பகுதி IV கீழ் குறிப்பிடவும், ஆனால் மாணவர்களின் தேர்ச்சிக்கு, இம்மதிப்பெண்களை கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2020 முதல் 2022 கல்வியாண்டு வரையிலான மூன்றாண்டுகளுக்கு மட்டும், பகுதி 1இன் கீழ் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்ப்பில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2020 முதல் 2022 கல்வியாண்டு வரையிலான காலத்திற்கு பகுதி 1 இன் கீழ் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதிலிருந்து விலக்களிக்கலாம் என்பது 2023ஆம் ஆண்டிற்கும் கூட பொருந்தும் என தீர்ப்பளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக மொழி சிறுபான்மை பேரவையினர் மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் மொழிப்பாட ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவித்து எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதற்கு இரு மாத கால அளவே உள்ள நிலையில், இந்த ஆண்டிற்கு கட்டாயத் தமிழ் பாடத்திற்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வெழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் நிலையில், சிறுபான்மை மொழி பயிலும் மாணவர்களுக்கு 2025 இல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி முறையீடு செய்யப்பட மாட்டாது எனவும்
உறுதிமொழி (Undertakings) அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 பிரிவு 5 இல் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் 2024ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வெழுத உள்ள தமிழ்மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள், பகுதி I-இன் கீழ் கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்குக் கோரி விண்ணப்பிக்கும் நேர்வில், அந்த மாணவர்களுக்கு மட்டும்.

அவர்களது கோரிக்கையினை ஏற்று, ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி, 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்களித்து. அவர்களது சிறுபான்மை தாய்மொழிப் பாடத்தினை பகுதி 1-இன் கீழ் தேர்வெழுத அனுமதி வழங்கலாம்.

2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை மொழி பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியர் பணியிடங்களையும் நிரப்பிடும் பொருட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக மத்திய நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details