புதுக்கோட்டை: காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயை உடைத்துத் தனிப்பட்ட முறையில் விவசாயத்திற்கும், அவருடைய கல்லூரிக்கும் காவிரி நீரைப் பயன்படுத்துவதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுப் பொய்யான குற்றச்சாட்டு என்றும், தன்னுடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், கலவரம் உண்டாகும் வகையில், பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் மூன்று பிரிவின் (504, 505, 153a) கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர்கள் அணியினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜயபாஸ்கர், "கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது தமிழக அரசு கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை மீட்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தேன்.
உடனடியாகத் தமிழக முதலமைச்சர் அன்று மாலையே அரசு அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும், அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து விளக்கமாக விளக்கிக் கூறியிருந்தார். இது வரவேற்கத் தகுந்த விஷயம்.
இதேபோன்று பொதுச் சுகாதாரத் துறை சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தேன். இதனைத் தொடர்ந்து பொதுச் சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூட்டத்தைக் கூட்டி ஆயிரம் இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். இதுவும் வரவேற்கத் தகுந்த விஷயம்.
எதிர்க்கட்சி உறுப்பினராகப் பொதுமக்களின் பிரச்னையை குறித்தும், குடிநீர் குறித்தும் நான் குற்றம் சாட்டியிருந்தேன். உண்மை நிலவரத்தைக் குற்றச்சாட்டாகச் சொல்லி இருந்தேன். நான் அரசியலில் தடம் மாறாத ஆள் மட்டுமல்ல. அரசியலில் தடுமாறாத ஆள். ஆனால் அமைச்சர் ரகுபதியோ அரசியலில் தடம் மாறியவர்.
ஆகையால் தற்போது அவர் தடுமாறுகிறார். நேற்று அதிமுகவில் இருந்தார் இன்று திமுகவில் உள்ள அவர் நாளை எங்கு இருப்பாரோ. தன்னுடைய இருப்பை தலைமையில் நிரூபிப்பதற்காக ஒரு சில அபாண்டமான குற்றச்சாட்டுகளை என் மீது வைத்துள்ளார். மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை என்று நான் கூறியவுடன் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து நான் வயலுக்கு நீர் பாய்ச்சுகிறேன் என்று அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறினார். நான் அவருக்கு 24 மணி நேரம் தருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை அவர் 24 மணி நேரத்திற்குள் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.