திருவள்ளூர்: காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
யார் இந்த சசிகாந்த் செந்தில்?: சசிகாந்த் செந்தில் கடந்த செப்.6 2019ஆம் ஆண்டு தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தலித் தலைவராகப் பணியாற்றினார்.
கர்நாடகா தேர்தலில் பெரும் பங்கு: பின்னர், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சி அதன் பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கியது. கடந்த 2022ஆம் ஆண்டிலே காங்கிரஸ் கட்சி 3 வார் ரூம்களை அமைத்தது. அதன் பொறுப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார்.
கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலுக்காக ஒரு வருடம் கர்நாடகாவில் தங்கிப் பணி புரிந்தார். கர்நாடகாவிலிருந்த பாஜக அரசுக்கு எதிரான பிரசார யுக்திகளை வடிவமைத்து நுணுக்கமான பணிகளைக் கச்சிதமாகச் சத்தமே இல்லாமல் முடித்துக் கொடுத்தார். கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு சசிகாந்த் செந்திலுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.
தெலங்கானா தேர்தலில் பெரும் பங்கு: கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 5 மாநில தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சி தயாராகி வந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தைக் குறிவைத்தார் சசிகாந்த் செந்தில். அம்மாநில அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி 40 பேர் கொண்ட குழுவுடன் தெலங்கானாவிற்கு வந்து காந்தி பவனில் தங்கி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வார் ரூம் அறையை நிறுவினார்.
தேர்தல் நேரத்தில் பொதுமக்களுடன் ஈடுபடுவதற்கான உத்திகளை நன்கு அறிந்திருந்தார். 24 மணி நேரமும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பயனாக தெலங்கானா சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அறுதியின்றி வெற்றி பெற்றது.
மத்திய வார் ரூம்: பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், கடந்த ஜன.6ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய வார் ரூம் அமைக்கப்பட்டது. இந்த வார் ரூம்மின் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார்.
தேர்தல் பத்திரம் விவகாரம்: இந்த நிலையில், இன்று தேர்தல் பத்திரம் தொடர்பாகவும் பேசி இருக்கிறார். அதில் கூறியதாவது, "கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வாங்கிக் கொண்டு, தேவையானதைச் செய்து கொடுத்து மிகப்பெரிய ஊழல் செய்துள்ளனர். மக்களின் பணத்தைச் சுரண்டி கார்ப்ரேட் நிறுவனங்களுக்குக் கொடுத்து எந்தளவுக்கு பாஜக ஊழல் செய்துள்ளது என்பது தற்போது தெரிய வரும் என்றார். இது தேர்தலில் எதிரொலிக்கும்" என்றார்.
இதையும் படிங்க:முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு லுக் அவுட் நோட்டீஸ்!