கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மறவன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த கென்னடி (60). இவர் நாகர்கோவிலில் கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் சுதிமா எம்பிபிஎஸ் முடித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். சுதிமாவின் மருத்துவப் படிப்புக்காக நாகர்கோவில் அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சி (50) என்பவர் சில உதவிகளை செய்து உள்ளார்.
இந்நிலையில், மேற்படிப்புக்காக சுதிமா முயற்சி செய்து வருவதையறிந்த ஜான்சி, சுதிமாவின் தந்தை ஆனந்த கென்னடியை தொடர்பு கொண்டு மருத்துவ மேற்படிப்புக்காக உதவி செய்வதாகவும், இதற்காக ரூ.23 லட்சம் செலவாகும் என்றும், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜான்சி தெரிவித்த தகவலின் படி, கடலூரைச் சேர்ந்த டாக்டர் ஜானகிராமன் மற்றும் அவரது தந்தை அண்ணாமலை ஆகியோர் ஆனந்த கென்னடியை தொடர்பு கொண்டனர். இவர்கள் கேட்டுக் கொண்டதன் படி, ரூ.23 லட்சத்தை ஆனந்த கென்னடி கொடுத்து உள்ளார்.
பின்னர் கல்லூரியில் சேர்ந்ததற்கான உத்தரவு நகலை வழங்கி உள்ளனர். அதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு கொண்டு சென்ற போது அவை போலியான உத்தரவு நகல் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆனந்த கென்னடி ஜான்சியிடம் கேட்டபோது, இந்த முறை உங்கள் மகளுக்கு சீட் கிடைக்கவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக வாங்கி தந்து விடுகிறோம் எனக் கூறி உள்ளார்.