திருச்சி:கரூரில் 100 கோடி ரூபாய் நில மோசடி புகாரில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நீதிமன்ற உத்தரப்பின்படி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட திருச்சி மற்றும் கரூர் மாவட்ட அதிமுகவினர் சிறை வாயிலில் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது 31 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள். அதுமட்டுமின்றி, தற்போது என் மீது ஒரு சிவில் வழக்கை பதிவு செய்து, அதை கிரிமினல் வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணை என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால், இன்று எனக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. ஜாமீன் கிடைத்து தற்போது வெளியே வந்திருக்கிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இந்த வழக்கிலிருந்து நிச்சயம் விடுபடுவேன் என தெரிவித்தார். மேலும், சிபிசிஐடி போலீஸ் காவலில் நான் இருந்தபோது என்னை யாரும் துன்புறுத்தவில்லை. என்னை மட்டுமல்ல, என்னைச் சார்ந்த அனைவருமே இந்த வழக்கில் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.