ஈரோடு:ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று(பிப்.1) நடைபெற்றது. இதற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது,"ஆலோசனை கூட்டத்தில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக மற்றும் வேறு கூட்டணியை சார்ந்தவர்கள் நின்றாலும், அவர்களுக்கு கடுமையாக உழைத்து வெற்றிக்கனியை பெற்று தருவோம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் இடங்களில் நோட்டோவை விட மிகவும் மோசமான நிலையில் வாக்குகளை பெறுவார்கள் இதனை நாம் அனைவரும் பார்க்கப்போகிறோம் என்று விமர்சனம் செய்தார்.
மேலும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கும் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும் என்றார். அதிமுக மற்றும் பாஜக ஒன்றாக இணைந்து போட்டியிட்டாலும், தனியாக போட்டியிட்டாலும் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும். கடந்த தேர்தலில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி நாட்டிற்கு பிரதமராக வரவேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி, இந்தியா கூட்டணி வெற்றிப்பெற்று, ராகுல் காந்தி பிரதமராவார். தமிழக காங்கிரஸ் 21 தொகுதி வேண்டும் என்று கூறுகிறார்கள். காங்கிரசுக்கு 21 தொகுதி ஒதுக்கவில்லை என்றாலும் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வராது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசை பூஜ்ஜியமாக்குவோம்" இவ்வாறு கூறினார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டிஎம்.திருச்செல்வம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.சரவணன், மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி, தெற்கு மாவட்ட தலைவர் ஜீ.ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!