தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 8:58 PM IST

ETV Bharat / state

ஈவிகேஎஸ் இளங்கோவன் Vs செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - EVKS AND SELVAPERUNTHAGAI ARUGED

Tamil Nadu Congress President: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கும், சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

செல்வப்பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன் புகைப்படம்
செல்வப்பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன் புகைப்படம் (credits - selvaperunthagai X page)

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, "நாம் பிறரைச் சார்ந்தே இருக்கப்போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா? என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும் என செல்வப்பெருந்தகை அரங்கத்தில் இருந்த தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர், பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "சில பேர் பேசியது பெரிய மேதாவிகள் போல் என் காதில் விழுந்தது. காரணம் ஒரே நேரத்தில் இரு பெரும் பதவிகள் வகித்ததால், செல்வப்பெருந்தகைக்கு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்.

தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் தோல்வியைக் குறித்து பேசும்பொழுது கட்சியில் சமூக விரோதிகள் உள்ளார்கள். நாம் தோல்வியை தழுவியுள்ளோம் எனக் கூறினார். அதேபோல், காங்கிரஸ் கட்சியில் உள்ள சமூக விரோதிகளை தூக்கி ஏறிய வேண்டும். மோடி ஒவ்வொரு நாளும் பிரதமராக இருப்பது நமது தலைவர்களின் உயிருக்கு ஆபத்து. இன்று திங்கள்கிழமை, அடுத்த திங்கட்கிழமைக்குள் சந்திரபாபு நாயுடு என்ன செய்கிறார் என்று பார்ப்போம். பின்பு மோடியும், அமித்ஷாவும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

காந்தியையும், நேருவையும் தெரியாது என்று கூறிவிட்டு நேற்றைய பதவி ஏற்பின் பொழுது காந்தியின் புகைப்படத்தை பின்னால் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளை ஒழிக்காமல் எப்படி நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும்? உயிரைப் பணயம் வைத்து நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும். நேரு தன் சிந்தனை பலத்தால் அன்று நமது நாட்டையும், இந்திய மக்களையும் தூக்கி நிறுத்தினார்.

ரஷ்யாவும் வேண்டும், அமெரிக்காவும் வேண்டும் என்று நடுநிலையாக இருந்தார். இன்று 10 எம்பிகள் கிடைத்துள்ளார்கள் என்றால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும், முதலமைச்சர் ஸ்டாலினும் காரணம் என்பதை மறந்து விட முடியாது. மோடியின் ஒவ்வொரு நாள் ஆட்சியும் நாட்டிற்கு ஆபத்து என்பதை விட தலைவர்கள் மூன்று பேரின் உயிருக்கும் ஆபத்து" என தெரிவித்தார்.

பின்னர் பேசிய செல்வபெருந்தகை, "இங்கு பேசியவர்கள் அவர்களின் கருத்தை கூறியுள்ளார்கள். அது கட்சியின் கருத்தல்ல. அடிமை இந்தியாவாக பிரிட்டிஷிடம் இருக்கும் பொழுது மகாத்மா காந்தியடிகள் ஆயுதம் இல்லாமல் எந்த நம்பிக்கையை வைத்து பிரிட்டிஷ்காரரை விரட்டினாரோ, இந்த தேசத்திற்கு விடுதலை பெற்று தந்தாரோ அதே நம்பிக்கையே காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதில், மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்த தேர்தல் ஒரு முன் உதாரணமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்று ஒரு பார்வை இருக்கிறது. ஜவஹர்லால் நேரு அவர்களின் காலம் வேறு, இன்று தலைவர் ராகுல் காந்தி காலம் வேறு, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காங்கிரஸ் பேரியக்கம் ஒரு பரிணாம வளர்ச்சியை கண்டிருக்கிறது.

ஆனால், நாம் இருப்பது இது ராகுல் காந்தியோட காலம் என்பதை ஒவ்வொருவரும் பேசும்போது மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். இன்றைக்கு தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் சில இடங்களிலே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்.

ஆனால், தேசிய பார்வை காங்கிரஸ் தோழர்களுக்கு என்றென்றும் இருக்க வேண்டும். தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் 1989 ஆம் ஆண்டு தனியாக நிற்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். எதற்காக தனியாக நிற்க வேண்டும் என்று முடிவெடுத்தார் பாசிச சக்திகள் வளர்ந்து விடுவார்கள் என்று தானே.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வேறு வழி இல்லை என்று நினைத்திருந்தால் அவரும் 1989 ஆம் ஆண்டு கூட்டணியில் தான் இருந்திருப்பார். நாம் யார் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும், கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும். இல்லையென்றால், நான் தலைவர் பதவியில் இருக்கமாட்டேன் உங்களோடு ஒருவனாக நானும் இருப்பேன்.

உண்மையும், ஒற்றுமையும் தான் காங்கிரஸ் பேரியக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். வெறுப்பு அரசியல் என்பது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் அல்ல. அது பாஜகவின் சித்தாந்தம். உழைப்பவர்களையும், ஒற்றுமையாக இருப்பவர்களையும் இந்த கட்சி என்றைக்கும் கைவிடாது விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடத்துவோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி மாற்றம் ஏன்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details