ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மலைக்கிராமம் மாக்கம்பாளையம். இக்கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தின் அவல நிலை குறித்து, கடந்த மே 14ஆம் தேதி ஈடிவி பாரத் இணையதளத்தில் செய்தி வெளியானது.
அந்த பேருந்தில் பயணிகள் இருக்கை, கைப்பிடி கம்பி, சேதமடைந்த மேற்கூரை, கயிறால் கட்டிய நிலையிலிருந்த இருக்கை என அரசுப் பேருந்தின் அவல நிலைகளை வீடியோவுடன் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த செய்தியின் எதிரொலியாக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, மாக்கம்பாளையம் மலைக்கிராமத்திற்கு இயக்கப்படும் பேருந்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு, பேருந்து முழுவதும் புதிதாக பெயிண்ட் அடித்து, புதுப்பொலிவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசுப் பேருந்தின் முந்தைய நிலை: சத்தியமங்கலத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள மாக்கம்பாளையம் மலைக்கிராமத்துக்கு தினந்தோறும் இரு முறை அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மருத்துவ சேவை, அரசு சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சத்தியமங்கலம் வருவதற்கு இந்த பேருந்தை நம்பிதான் உள்ளனர்.