ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கடாசலம் வீதியில் ஜவுளி நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான ஜவுளி நிறுவனம் மூலம் ஜவுளி ரகங்களை பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சீனிவாசனின் அலைபேசிக்கு வீடியோ கால் செய்து சிபிஐ எனக் கூறி சிலர் ரூ.27 லட்சத்தை மோசடி செய்துள்ளதாக அவர் இன்று (டிச.5) ஈரோடு சைபர் க்ரைம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கடந்த சில நாட்களுக்கு முன் எனது அலைபேசிக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதில் பேசியவர்கள் நாங்கள் சிபிஐ அதிகாரிகள், மும்பை அந்தேரி சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். உங்களது சிம் கார்டு இரண்டு மணி நேரத்தில் டீஆக்டிவ் (Deactivate) ஆகிவிடும். ஏனென்றால் நீங்கள் உங்கள் ஆதார் அட்டை, சிம் கார்டு வைத்து வங்கி கணக்கு தொடங்கி 6.30 கோடி மோசடி செய்துள்ளீர்கள்” என கூறினர்".
தண்ணீர் கூட குடிக்கவிடாமல் 4 மணி நேரம் விசாரணை:இதைகேட்டு அதிர்ச்சியடையந்த நான் செய்வதறியாமல் இருந்தேன். மேலும் அவர்கள் என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். 4 மணி நேரம் வீடியோ காலில் அமர வைத்து விசாரணை நடத்தினர். இந்த வீடியோ கால் மூலம் நடந்த போலி விசாரணையில் என்னை தண்ணீர் கூட குடிக்கவிடாமல் அவதிப்படுத்தினர். மேலும் என்னிடம் அந்த கும்பல் வங்கி கணக்கு விபரங்களை கேட்டு, அதில் இருந்த பணம் இருப்பு குறித்து அறிந்து கொண்டு அதனை அனுப்பி வைக்கும்படி மிரட்டினர்.
தற்போது, உடனடியாக அனுப்பினால் இந்த பணத்தை மீண்டும் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றனர். இதையடுத்து எனது வங்கியில் இருந்த 27 லட்சத்தை அனுப்பினேன். அதை பெற்றதும் அவர்கள் அழைப்பை துண்டித்து விட்டனர். பின், நடந்துவற்றை நான் எனது மனைவியிடம் கூறினேன். இது மோசடி நபராக இருக்கும் என மனைவி கூறியதை தொடர்ந்து ஈரோடு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தேன்” என்றார்.