திருநெல்வேலி: ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரகுமத் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அந்த பள்ளியின் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் தமிழகத்தில் இருக்கும் 11 கிளை பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அப்பள்ளி நிர்வாகம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், அந்த பள்ளியின் ஈரோடு தலைமையகம் மற்றும் அதன் கிளை பள்ளிகளில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நெல்லை கிளை தனியார் பள்ளியில் மாநகர காவல் துறை மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர். அதனால் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.