ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகாரட்சி அன்னையன் வீதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் வயர் கூடை மற்றும் தையல் தொழில் செய்து வருகிறார். இவரது தங்கை செல்வி மற்றும் வெங்கடசாலம் தம்பதிக்கு சுரேந்திரன் என்ற மகன் உள்ளார்.
தங்கை செல்வியின் குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், பாக்கியம் சுரேந்திரனை தனது பாதுகாப்பில் வளர்த்து, ஆரம்பக் கல்வி முதல் தற்போதுவரை அரசுப் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். சுரேந்திரன் மேல்நிலைக் கல்வியை சத்தியமங்கலம் அரசு மாதிரிப் பள்ளியில் படித்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனையடுத்து, அந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் சுரேந்திரன் தேர்ச்சி பெறாத காரணத்தால், குடும்பத்தில் வறுமை நிலவினாலும் தையல் தொழிலில் கிடைத்த குறைந்த வருமானத்தை வைத்து சுரேந்திரனின் மருத்துவக் கனவை நனைவாக்க, பாக்கியம் தனியார் நீட் பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
இதனையடுத்து, அண்மையில் நடந்த நீட் தேர்வில் சுரேந்திரன் 720க்கு 545 கட் ஆப் எடுத்துள்ளார். அதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சுரேந்திரனுக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது. கூரை வீட்டில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சுரேந்திரனுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.