சேலம்: தஞ்சாவூர் மாவட்டம், அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகிய தொண்டர்கள் இன்று சேலம் அடுத்த ஓமலூர் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - Edappadi palaniswami X Page) பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓஎஸ் மணியன் ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் தங்களை இன்று இணைத்து கொண்டனர். ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைத்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு திறமை இல்லாத நிர்வாகத்தின் சீர்கேடே காரணம். முழு சுதந்திரத்தோடு காவல்துறை செயல்படவில்லை.
அவர்களுக்கு சுதந்திரம் அளித்திருந்தால் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுத்திருக்கலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். சென்னை காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் மட்டுமே இது போன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு இது தீர்வு அல்ல. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் காவல் துறையினரிடம் சரணடைந்தவர்கள்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லங்களில் நடத்திய சோதனை திமுகவால் திட்டமிட்டு அரங்கேற்றிய சம்பவம். அவர் மீதான புகார் சிவில் வழக்கிற்கானது.
ஆனால், அதனை சித்தரித்து குற்ற வழக்காக இந்த அரசு திரித்து சோதனை நடத்தி அதிமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. பெங்களூரு புகழேந்தி ஓபிஎஸ் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்கள் குறித்து கேள்விகள் எதுவும் எழுப்ப வேண்டாம். அவர்கள் பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க:“ரவுடிகளை ஒடுக்க அவர்களது மொழிகளிலேயே நடவடிக்கை எடுப்பேன்” - சென்னை புதிய காவல் ஆணையர் அருண் சபதம்! - chennai police commissioner arun