அதிமுக கொண்டு வந்த திட்டங்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு செயல்படுத்தவில்லை கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியிலிருந்த நிலையில் கச்சத் தீவு குறித்துப் பேசவில்லை, தேர்தல் வந்தவுடன் பேசுகின்றனர்.
கடந்த 1974ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதற்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால் இன்று வரை கச்சத்தீவை மீட்க அதிமுக போராடி வருகிறது. தற்போது காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக அரசு 10 சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளது, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
நீட் தேர்வு ரத்து, அனைவருக்கும் உரிமைத் தொகை, நெல் குவிண்டால் விலை உயர்த்தப்படும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, எரிவாயு அடுப்பு விலை குறைப்பு, கல்விக்கடன் ரத்து போன்ற எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்கு சேகரிக்க வருகின்றனர். மக்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் விற்பனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் முறையாகக் கையாளவில்லை. அதிமுக அனைத்து மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரி, சாலைகள் மேம்பாடு, தடுப்பணைகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கியது. அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் என்பதால் திமுக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாகச் செயல்படுத்தவில்லை. மக்கள் பயன்பெறும் எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு மீண்டும் வந்தவுடன் செயல்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 102 வயது முதியவருக்குப் பேரன், கொள்ளுப்பேரன் நடத்திய கனகாபிஷேகம் நிகழ்ச்சி.. திருவிழாக்கோலமாக மாறிய ஆவலப்பள்ளி! - Kanakabhishekam Festival