கோவை: காடுகள் என்றால் என்ன? நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்சநீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் மத்திய அரசுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறது. காடு என்ற சொல்லின் பொருள் ஏதும் மாறவில்லை. 1996ம் ஆண்டு கோதவர்மன் மற்றும் இந்திய அரசுக்கு இடையிலான வழக்கின் தீர்ப்பை (T.N. Godavarman Thirumulkpad vs Union Of India & Ors) மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றம், இந்த தீர்ப்பின் படி தான் காடு என்பதற்கான பொருள் இருக்கிறது என உறுதிப்படுத்தியிருக்கிறது.
என்ன சொல்கிறது 2023 வனச்சீர்திருத்த சட்டம்: 2023ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனச்சீர்திருத்தச் சட்டம் காடு என்பதற்கான வரையரையை மாற்றுகிறது. காடுகள் என்பவை மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட காடுகளைத் தவிர, காடுகளுக்குரிய குணநலன்களோடு இருக்கும் நிலப்பரப்பை காடு என வரையறுக்க முடியாது என கூறுகிறது. இவற்றை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு சில தளர்வுகளையும் வழங்குகிறது.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்ட வடிவமானது. இச்சட்டத்திற்கு எதிராக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் வனத்துறை அலுவலர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதில் பிப்ரவரி 19ம் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், காடு என்றால் என்ன என்பதற்கான வரையறையை தெரிந்து கொள்ள, 1996ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது.
1996ம் ஆண்டு தீர்ப்பு கூறுவது என்ன?:இந்த தீர்ப்பின் படி வனம் இருக்கும் நிலங்கள் அரசு அல்லது தனியார் என யாருடைய வசம் இருந்தாலும், வன பாதுகாப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டதே. வனம் இருக்கும் நிலங்களை வேறு தேவைகளுக்காக மத்திய அரசின் அனுமதியின்றி எந்த மாநில அரசும் பயன்படுத்தக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மீறும் வகையில் வனச்சீர்திருத்த சட்டம் 2023 இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் வன ஆர்வலர்கள்.
நீலகிரி மலைக்காடுகளுக்கான வழக்கு:நாடு தழுவிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த 1996ம் ஆண்டு வழக்கு, தமிழ்நாட்டிலிருந்து தான் தொடரப்பட்டது. இது தொடர்பாக இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், " 1969ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், ஜமீன்தார்களுக்கு சொந்தமாக இருந்த 50,000 ஹெக்டேருக்கு மேலான நிலம் அரசுடமையாக்கப்பட்டது.
இந்த நிலத்தை யாருக்கு கொடுக்கலாம் என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்பாகவே பல பேர் ஆக்கிரமிப்பு செய்தனர். அந்த பகுதிளில் இருந்த வனம் பல இடங்களில் அழிக்கப்பட்டது. இந்நிலையில் 1995ஆம் ஆண்டு அந்த இடத்துக்கு சொந்தமான கோதவர்மன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜமீன் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது காடுகளாக பாதுகாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அங்குள்ள காடுகள் மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் 2012ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.