சென்னை:2024 -25 ஆம் கல்வியாண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் கடந்த மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர். அதன் பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக கடந்த ஜூன் 10,11 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 93 ஆயிரத்து 853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட்டணம் செலுத்தியுள்ள 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்த 4,489 விளையாட்டு வீரர்களுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
இவர்களில் கட்டணங்களைச் செலுத்திய மாணவர்களின் சான்றிதழ்கள் நாளை (ஜூன்.13) முதல் 30 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள், தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. கட்டணங்களை செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது இருந்தாலும் அதனையும் பெற்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.