சென்னை:சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, வேப்பேரி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (மார்ச் 06) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், குறிப்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதல் பிரதான சாலையில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபர் செல்வராஜ் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
தொழிலதிபர் செல்வராஜன் என்பவர் 'அருணாச்சலா இன்பேக்ட்ஸ்' என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல வருடங்களாக அரசின் ஒப்பந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மேலும், நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலமாக பல்வேறு ரேஷன் பொருட்களை சப்ளை செய்யக்கூடிய நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் தொழிலதிபர் செல்வராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருக்க முகாந்திரம் உள்ளதாக தற்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்வராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த சோதனையானது பல்வேறு இடங்களுக்கு விரிவடையும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:கோவை ஈஷா யோகாவில் மகா சிவராத்திரி வழிபாடு; துணை குடியரசு தலைவர் பெருமிதம்