தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேறு இடத்தை கைகாட்டிய நபர்கள்.. 2 வாரத்திற்குப் பிறகு கடத்தல் தந்தம் சிக்கியது எப்படி? - ELEPHANT TUSK Smuggling - ELEPHANT TUSK SMUGGLING

TUSK THEFT ISSUE: கடந்த மே 31ஆம் தேதி நீலகிரியில் இருந்து யானை தந்தம் ஒன்று கடத்தப்பட்டது, அதை கடத்தியாதாக கூறப்படும் கும்பல் இன்று மேட்டுப்பாளையம் வழி கோவைக்கு செல்லும் சாலையில் வனத்துறையினரால் பிடிப்பட்டு தந்தம் கைப்பற்றப்பட்டதன் பரபரப்பான பின்புலத்தை காணலாம்.

சிக்கிய நபர்கள், கடத்தப்பட்ட தந்தம்
சிக்கிய நபர்கள் மற்றும் கடத்தப்பட்ட தந்தம் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 7:13 PM IST

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு செல்லும் வழியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக கடந்த மே 31ஆம் தேதி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார், கோயமுத்தூர் வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை தந்தம் கடத்தி வரும் வாகனங்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் இறங்கினர்.

சேஸ் செய்து கேட்ச் செய்த வனத்துறை அதிகாரிகள்:அப்போது, துடியலூர் பகுதியில் நின்றிருந்த வனத்துறை குழுவினர் சந்தேகப்படும்படியாக வந்த பொலிரோ ஜீப்பை மடக்க முயன்றனர். ஆனால், அந்த நபர்கள் வனத்துறையினர் வந்த காரை இடித்து விட்டு, பன்னிமடை வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். இதனைத் தொடர்ந்து, மற்ற குழுக்களில் இருந்தவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பொலிரோ வாகனத்தை வனத்துறையினர் சேசிங் செய்தனர். அந்த வாகனம் தடாகம் வீரபாண்டி அருகே வரும்போது வனத்துறையினரால் மடக்கி நிறுத்தப்பட்டது. பின்னர், அந்த வாகனத்தில் வந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையும், பின்புலமும்:அந்த விசாரணையில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து யானை தந்தம் கடத்தி வந்ததாகவும், வனத்துறையினரைக் கண்டதும் வாகனத்தை விரைந்து ஓட்டியதாகவும், பின் அவர்களிடம் சிக்கினால் தப்பிக்க வேண்டும் என்பதற்காக வந்த வழியான வீரபாண்டி சாலை ஓரத்தில் யானை தந்தத்தை வீசி எறிந்ததாக விசாரணையில் கைதானவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த கடத்தல் நீலகிரி மாவட்டம் பிதர்காடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் சங்கீதா தலைமையில் நடத்தப்பட்டதும், அவருடன் வந்த கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ், கோவை வெள்ளலூரைச் சேர்ந்த லோகநாதன், நாகமாநாயக்கன்பாளையத்தைச் சார்ந்த அருள் அரோக்கியம், பாலமுருகன் ஆகியோரை கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏமாற்றமடைந்த வனத்துறையினரும் சிக்கிய தந்தமும்:விசாரணையில் அவர்கள் கூறிய இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் அங்கு யானை தந்தம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பின், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தடாகம் அருகே உள்ள வீரபாண்டி அருகே சாலை ஓரத்தில் யானை தந்தம் கிடப்பதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், யானை தந்தத்தைக் கைப்பற்றி சோதனை செய்ததில் அது கடந்த 31ஆம் தேதி நீலகிரியில் இருந்து கடத்தி வரப்பட்ட தந்தம் என்பதை உறுதி செய்தனர்பின்னர் அந்த யானை தந்தத்ததை நீதிமன்றத்தில் காட்சிபடுத்தப்பட்ட பின், வனத்துறையினர் அதனை சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் அவர்களை விசாரனை செய்ய முயன்றனர். ஆனால், அவர்கள் வனத்துறையினரிடமிருந்து தப்பித்துச் செல்ல பார்த்தனர். வனத்துறையினர் பின்தொடர்வதை கவனித்த அவர்கள், யானை தந்தத்தை சாலை ஓரத்தில் இருந்த புதரில் வீசிச் சென்றனர்.

ஆனால், அவர்கள் வீசிய இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தைக் கூறியதால் யானை தந்தம் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர், அதனை சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்து, அந்த தந்தம் யாருக்கு விற்க கொண்டு வரப்பட்டது என விசாரித்து வருகிறோம். அதை செய்த குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“நீ வர்ற வரைக்கும் வெயிட் பன்னுவாங்களா?”.. ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்த யானை!

ABOUT THE AUTHOR

...view details