திருப்பத்தூர்:ஜவ்வாது மலைத்தொடரில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக டஸ்கர் என்னும் ஒற்றைக்கொம்புடைய காட்டுயானை வாழ்ந்து வந்தது. இந்த டஸ்கர் என்னும் ஒற்றை கொம்புடைய காட்டுயானை நேற்று நள்ளிரவில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர், உடையராஜபாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நடமாடி வந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காட்டுயானை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் உடையராஜபாளையம், ஜமீன், குளிதிகை, வெங்கிலி, கீழ்முருங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நிலப்பகுதியில் புகுந்த யானையை, இளைஞர்கள், திருப்பத்தூர் மாவட்ட உதவி வன அலுவலர் ராதா கிருஷ்ணன் தலைமையிலான ஆம்பூர் மற்றும் ஒடுகத்தூர் வனத்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ஒன்றிணைந்து காட்டு யானையை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க வைப்பதற்காக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.