சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின் வாகன சார்ஜ் மையங்கள் அமைப்பதில் முன்னணி நிறுவனமான ஸ்மைல் எக்ஸ்இவி (Smile XEV) மற்றும் டிஜேடி ஹைக்கா (DJT Haika) நிறுவனத்தினரின் இணையதளம், பிரத்யேக செயலி மற்றும் புதிய சார்ஜிங் மையங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி, காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றைத் தாண்டி நமது மக்களையும், இயற்கையையும் பாதுகாக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் தேவை தற்போதைய சூழலில் அதிகம் இருக்கிறது.
ஆகவே, மின் வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் அந்நிய செலாவணியை சேமிப்பது மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உருவாகிறது. இது அனைத்து மனிதர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப் பெற வழிவகுக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அந்த வகையில், தற்போது இந்த வாகனங்களுக்கான டிசி சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் மையங்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜேடி ஹைக்கா நிறுவனம் இந்த சார்ஜர்களை முழுமையாக உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தயாரிப்பதற்கான உரிமம் வைத்திருக்கும் பிரத்யேக நிறுவனங்களில் ஒன்றாகும்.