வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்ய சென்ற தேர்தல் பார்வையாளர் தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து பகுதிகளும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மையங்களை, அந்தந்த தொகுதியின் மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் பொதுப் பார்வையாளராக கன்ஹீராஜ் ஹச் பகதே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே, கும்பகோணம் அருகே உள்ள மயிலாடுதுறைக்கு உட்பட்ட திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் பதட்டமான வாக்குச் சாவடிகளை வட்டாட்சியர் பாக்யராஜ் உடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்த வாக்குச்சாவடிகளில் ஒன்றான திருபுவனம் மெட்ரிக் பள்ளியில், குழந்தைகளுக்கு யுகேஜி (UKG) வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குழந்தைகளைப் பார்த்த தேர்தல் பார்வையாளர் உற்சாகமடைந்து, கையில் சாக்பீஸை எடுத்து கரும்பலகையில் எழுதத் துவங்கினார். தொடர்ந்து, சில குறிப்புகளை எழுதி குழந்தைகளிடம் பதில் கேட்டார், அதற்கு அந்த குழந்தைகளும் பதில் அளித்தனர்.
அதைக் கண்டு வியந்த அதிகாரியும், அவர்களைப் பாராட்டி மகிழ்ந்ததுடன், அந்த குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரையும் அழைத்து வெகுவாகப் பாராட்டி விட்டுச்சென்றார்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களின் தபால் வாக்கு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! - Postal Vote Guidelines