சென்னை:சென்னை யானை கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், பூக்கடை சரக துணை ஆணையர் தலைமையில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அங்கு இருந்த மூன்று நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் அறை முழுவதும் சோதனை செய்துள்ளனர். அப்போது, அறையிலிருந்த பை ஒன்றில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்து, மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அந்த அறையின் உரிமையாளர் யாசர் அராபத் என்பதும், அந்த பணத்தை வாங்க வந்தவர் குணா ஜெயின் என்பதும் தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரத்தைச் சார்ந்த ஒருவர் கூறியதன் அடிப்படையில், அந்த அறைக்கு வரக்கூடிய நபரிடம் இந்த பணத்தை கைமாற்றுவதை யாசர் அராபத் வழக்கமாக செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1.42 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து பணத்தையும், பிடிபட்ட மூன்று நபர்களையும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இந்த பணம் யாருடையது, எதற்காக கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் இது ஹவாலா பணமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரத்தில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில், பொதுமக்கள் உரிய ஆதாரமின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதிக அளவில் பணம் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டது.