திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், இன்று ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில், முக்கூடல் அருகே இடைகால் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், திடீரென நயினார் நாகேந்திரன் வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். பிரசார வாகனத்தின் பின்னால் வந்த சொகுசு காரில், அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையினர் முழுவதுமாக சோதனையிட்டனர்.
காரில் இருந்த உடைமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்த போதிலும், சுமார் பத்து நிமிட சோதனைக்குப் பிறகு வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வாகனங்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேநேரம், ஏற்கனவே சென்னையில் பாஜக உறுப்பினர் உள்பட 3 பேரிடம் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்களிடம் அடுத்தடுத்து தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதிலும் குறிப்பாக, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானதாக கூறப்படும் லட்சுமி காயத்தி உணவகத்தின் பங்குதாரர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. ஆனால், பணம் எதுவும் பறிமுதல் செய்யவில்லை.
இதுமட்டும் அல்லாது, நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் தடையை மீறி பிரச்சாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபோன்று, நயினார் நாகேந்திரனைக் குறிவைத்து அடுத்தடுத்து சோதனைகள் மற்றும் வழக்குகள் பதியப்படும் நிலையில், இன்று (ஏப்.09) பிரச்சாரத்தின் போது அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இடைநிறுத்தி சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"குக்கர் சின்னத்தின் பட்டன் தேயும் அளவுக்கு வாக்களிக்க வேண்டும்" - தேனி மக்களுக்கு டிடிவி தினகரன் மனைவி வேண்டுகோள்!