சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புகைப்படக் கண்காட்சியை திறந்த வைத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டு, இறுதியாக திமுக நிர்வாகிகள் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படக் கண்காட்சியானது இன்று முதல் ஜூன் 3ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1934ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதி தனது சிறு வயது முதல் வாழ்நாளில் அரசியல் வாழ்வில் பயணித்த பல நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் முதல் கலர் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தொடங்கிய இந்த கலைஞர் நூற்றாண்டு விழா, இந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஓராண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை திமுக கட்சி சார்பிலும், அரசு சார்பிலும் நலத்திட்ட உதவிகள், கண்தான முகாம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, இந்த புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச்செயலளார் ஆர்.எஸ்.பாரதி, "கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வருகிற ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் 4ஆம் தேதி வரை தமிழகத்திலும், மற்ற இடங்களிலும் அமலில் இருப்பதால் 3ஆம் தேதி விழாவினை பிரமாண்டமாக நடத்த இயலவில்லை.