சென்னை:நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரையும், கட்சியின் தலைவராக தன்னையும் அறிவித்துக் கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயரை ஏற்கனவே பதிவு செய்தோர் அல்லது அந்த பெயர் குறித்தான ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்ற பொது அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்தித்தாள் மூலமாக வெளியிட்டுள்ளது.
அதேபோல், கட்சியின் நிர்வாகிகள் குறித்தான ஆட்சேபனைகளையும் தெரிவிக்கலாம் என்றும் இந்த அறிவிப்பு மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கட்சியின் தலைவராக ஜோசப் விஜய், பொதுச் செயலாளராக ஆனந்த் என்கிற முனுசாமி, பொருளாளராக வெங்கட் ரமணன், தலைமை நிலைச் செயலாளராக ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தஹிரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கட்சி நிர்வாகிகள் அல்லது கட்சியின் பெயர் குறித்தான ஆட்சேபனைகளை ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வெளியானது. அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். விரைவில் நாம் சந்திப்போம் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “பிரதமர் மதவாத அரசியல் பேசுவதாக காங்கிரஸ் கூறும் கருத்தை ஏற்க முடியாது” - ஜி.கே.வாசன் பதில்! - GK Vasan