சென்னை: சினிமாவிலிருந்து அரசியல் களத்தில் குதித்திருக்கும் நடிகர் விஜய் கட்சியின் கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்ததோடு, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இந்த கொடியை டிகோட் செய்து பலரும் பேசி வரும் நிலையில், இதில் யானைகள் இடம்பெற்றிருப்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி அதிருப்தி தெரிவித்தது.
ஏற்கனவே தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக யானை இருக்கும் நிலையில், த.வெ.க.(TVK) கொடியில் யானைகளின் இதனுடன் ஒத்துப்போவதாகக் கூறி, அக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் இருக்கும் யானைகளின் சின்னத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதியிருந்தனர்.
இதையும் படிங்க: “இனி எந்நாளும் தமிழ்நாட்டை திமுக தான் ஆள வேண்டும்”- முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை!
இந்த கடிதத்திற்கு பதில் அளித்து இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி, அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் நெருங்கும் நேரத்தில் சின்னம் வழங்கப்படும். அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகளைப் பொறுத்த வரையில், தேர்தல் ஆணையம் ஒப்புதலும் தருவதுமில்லை, அங்கீகாரமும் தருவதில்லை என்ற தெளிவான விளக்கத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் அளித்திருந்தது.
இதன்மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றாலும் கூட, சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம்) 1950க்கு உட்பட்ட வகையில் கொடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மற்றொரு அரசியல் கட்சிகளின் கொடிகளை ஒத்த தோற்றம் உடைய வகையில் கொடிகள் அமைவதைத் தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விளக்கம் பெறுவதற்காக சட்டவல்லுநர்களை அணுகியபோது," அரசியல் கட்சிகளின் சின்னம் மற்றும் கொடிக்கு விதிகள் தனியாக இருப்பதால், யானை பொறித்த கொடியை விஜய் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது தவறில்லை" என தெரிவிக்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் கொடி மற்றும் சின்னத்திற்கான விதியின் படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி கொடிகளில் வேறு கட்சியின் தேர்தல் சின்னங்களையும் உபயோகப்படுத்தலாம். அதற்கு, தேர்தல் ஆணையம் எந்த தடையும் விதிக்கவில்லை. தாராளமாக பயன்படுத்தலாம்.
பதிவு செய்யப்பட்ட கட்சி: தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சியாக கருதி தேர்தல் ஆணைய விதிகளின் படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெற வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெறும் வரை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் இலவச சின்னங்களிலேயே கட்சிகள் போட்டியிட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி :பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றி விரும்பும் தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் அந்த கட்சிக்கு வழங்கும். வாக்கு சதவிகிதம் குறைந்து அங்கீகாரம் பறிக்கப்படும் வரை அனைத்து தேர்தலிலும் அந்த சின்னத்தை கட்சி தொடர்ந்து பயன்படுத்த முடியும். அந்த சின்னம் வேறு யாருக்கும் ஒதுக்கப்பட மாட்டாது.
இதுகுறித்து வழக்கறிஞர் பாபு முருகவேலுவிடம் கேட்ட போது, தேர்தல் சின்னத்தை கட்சி கொடியில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் எந்த தடையும் விதிக்கவில்லை. தேர்தலின் போது த.வெ.க தாராளமாக கொடியை பயன்படுத்தலாம். யானை சின்னத்தை கொடியில் விஜய் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணைய விதிப்படி தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) எனும் கட்சியைத் தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக நிர்ணயத்து, புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் விஜய், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை அடுத்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தவிருக்கிறார்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொடிக்கான விளக்கத்தையும், கொள்கை முழக்கத்தையும் அறிவிப்பார் என்பதால் அந்த மாநாடு தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகப் பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்