Rangoli awareness programme about voting in Ariyalur அரியலூர்:அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்வில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அந்த வகையில், எனது வாக்கு எனது எதிர்காலம், நமது ஓட்டு நமது உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு என் உரிமை, நல்லாட்சி அமைய வாக்களிப்போம், வாக்களிப்பது ஜனநாயக கடமை, நோட்டுக்கு இல்லை ஓட்டு, எங்கள் ஓட்டை விற்க மாட்டோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோலங்கள் போடப்பட்டு இருந்தது.
அப்போது, இதேபோல் தங்கள் இல்லங்களிலும் மற்றும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் கோலம் போட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார். இந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்கா தாரிணி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு ஏப்.13 முதல் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Tamil Nadu Schools Summer Holiday