சென்னை:சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ரூ.228 கோடி நன்கொடையை முன்னாள் மாணவர் விருது பெற்ற டாக்டர் கிருஷ்ணா சிவுகுல (எம்டெக்,1970) வழங்கியுள்ளார்.
அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடையை இதுவாகும். சென்னை ஐஐடி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், டாக்டர் கிருஷ்ணா சிவுகுலவை கெளரவிக்கும் விதமாக கல்வி நிறுவன கட்டடம் ஒன்றுக்கு கிருஷ்ணா சிவுகுலா பிளாக் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுல, அவரின் மனைவி ஜெகதாம்பாள், சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி, ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், " சென்னையில் ஐஐடியில் படித்து முடித்து 53 வருடம் கழித்து கிருஷ்ணா சிவுகுல ரூ.228 கோடி நிதியுதவி வழங்குகிறார். இந்த நிதியை சென்னை ஐஐடியில் படித்து சிறந்த இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் உதவி தொகை வழங்கவும், விளையாட்டு பிரிவில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கவும், சார்க் நாடுகளில் இருந்து சென்னை ஐஐடியில் வந்து படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல ஏற்கனவே ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டு வரும் 'சாஸ்த்ரா' இதழை மாதம்தோறும் மாணவர்கள் படிக்கும் வகையில் கொண்டு வருவதற்கு இந்த உதவி தொகை பயன்படுத்தப்படும்.
மேலும், கடினமான துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னை ஐஐடிக்கு வரும் நிதியுதவி அதற்கு முன்பே செலவிடும் வகையில் செலவு இருக்கிறது. ஐஐடிக்கு வரவு எட்டணா செலவு பத்தணா என்ற நிலையில் நிதி தேவைப்படுகிறது.
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், வளத்தை மேம்படுத்தும் வகையில் பெறப்படும் நிதிகள் செலவிடப்படுகின்றன. கடந்தாண்டு ரூ.2500 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகும் எங்களின் முன்னாள் மாணவர் ஒருவர் தாம் படித்த கல்வி நிறுவனத்தை நினைவில் வைத்து செயலாற்றுவது, கல்வி மட்டுமே மனிதகுலத்திற்கு நாம் அளிக்கக் கூடிய ஒரே அழியாத செல்வம் என்பதை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிருஷ்ணா சிவுகுலாவின் மிகப்பெரிய பங்களிப்பிற்காக நன்றி" என தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி டீன் கூறும்போது, "டாக்டர் கிருஷ்ணா சிவுகுல வெற்றிகரமான தொழில்நுட்ப தொழிலதிபர் மட்டுமல்ல, தலைசிறந்த முன்னாள் மாணவருமாவார். அவருடைய பணிவும், பெருந்தன்மையும் வரவிருக்கும் காலங்களில் முன்னாள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியான பண்புகளாகும்.