சென்னை:பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை இன்று தமிழ்நாடு மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் ஆணையருமான வீரராகவராவ் வெளியிட்டார். அதில், 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பொதுப்பிரிவில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 601 பேரும், தொழிற்கல்விப் பிரிவில் 2 ஆயிரத்து 267 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கான 500 இடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் 2,112 பேருக்கும், மாற்றுத்திறானாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 1223 பேரும் இடம் பெற்றுள்ளனர். மாணவர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 731 பேரும், மாணவிகள் 87 ஆயிரத்து 134 பேரும், மூன்றாம் பாலினித்தவர் 3 பேர் என ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 729 பேரும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 24 ஆயிரத்து 661 பேரும், ஐசிஎஸ்இ பாடத்தில் படித்த 943 பேரும், பிற பாடத்திட்டத்தில் படித்த 535 பேரும் இடம் பெற்றுள்ளனர். 2023-24ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் 1 லட்சத்து 86 ஆயிரத்து 553 பேரும், 2024ம் ஆண்டிற்கு முன்னர் படித்தவர்கள் 13 ஆயிரத்து 315 பேரும் இடம் பெற்றுள்ளனர். தமிழ் வழியில் படித்த 58 ஆயிரத்து 744 மாணவர்களும், ஆங்கில வழியில் படித்த 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 மாணவர்களும், பிற மொழியில் படித்த 47 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.