சென்னை: பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தி, வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி, வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் R.S.பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை நிலவுவது வாடிக்கையான ஒன்றாகும். அதேபோல், மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை முடக்குவதும், நீர்த்துப்போகச் செய்வதும் தொடர்கதை.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட அதிமுக ஆட்சியில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது.
மேலும், சாலைகள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாததன் காரணமாக ஏற்படும் புழுதியால், பொதுமக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிக்கு உள்ளாவதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், நகராட்சி முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்படாமல் அந்தந்த சாலையிலேயே எரிக்கப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அப்பகுதிவாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.