தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து சொன்னபோது மட்டும் இனித்தது?" - எடப்பாடி பழனிசாமி தாக்கு! - Edappadi Palaniswami

Edappadi Palaniswami vs M.K.Stalin: பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் சொன்னபோது முதலமைச்சருக்கு இனித்தது. இப்போது ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா என முதலமைச்சர் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை கேட்டிருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 7:31 AM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொம்மை முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும், இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்திற்கும், திராவிட மாடல் ஆட்சி என்று வசனம் பேசி, தமிழக மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும், இப்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஊறுகாயாகத் தேவைப்பட்டன.

தொட்டுப்பார், கட்டிப்பார், வெட்டிப்பார், இந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசைப் பார்த்து வறட்டு சவால்களை தானும் விட்டு, கூட்டணிக் கட்சியினரையும் விட்டு வசைபாடச் செய்தார். இனி கூட்டணிக் கட்சியினரின் தயவு தேவையில்லை, குடும்ப நலன் முக்கியம் என்றவுடன் தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கலந்துகொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரீகமாக சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார்.

சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும். புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில மந்திரிகளைக் காப்பாற்றவும் மு.க.ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் அதிமுகவிற்கு எந்த கவலையும் இல்லை. தன்னுடைய கபடநாடகம் என் மூலம் வெளிப்பட்டுவிட்டதே என்ற கோபத்தில் வானத்திற்கும், பூமிக்கும் தாவிக் குதித்திருக்கிறார்.

புரட்சித் தலைவர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு மத்திய அரசில் உள்ளவர்களை நான் அழைத்ததாகவும், ஆனால் மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்றும் தார்ப்பாயில் வடிகட்டிய பொய் மூட்டை ஒன்றை 'நாணயம் மிக்கவரின் மகன்' அவிழ்த்து விட்டிருக்கிறார். புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவையொட்டி எனது தலைமையிலான அம்மா அரசில், மாவட்டந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினோம்.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரைச் சூட்டினோம். புரட்சித் தலைவர் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிட்டோம். எங்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாணயம் வெளியிட்டது, விழாவை நாங்களே நடத்தினோம் - என் தலைமையிலான தமிழக அரசு நடத்தியது. ஆனால், மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே திமுகவின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் திமுகவினர். தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் திமுக ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் ஸ்டாலின் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் சொன்னபோது முதலமைச்சருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை விடியா திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்துத் தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "சாதிய வன்மத்துடன் கிணற்றுத் தவளை போல ஈபிஎஸ் பேசி வருகிறார்" - அண்ணாமலை காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details