தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூர் அதிமுக நிர்வாகி படுகொலை; மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி! - EPS SLAMS DMK GOVT - EPS SLAMS DMK GOVT

Cuddalore AIADMK member murder: கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்க, தான் சட்டம் ஒழுங்கை சிறப்புற காத்து வருவதாக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரணாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 6:21 PM IST

சென்னை:கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.

அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். விடியா ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.

பகல்-இரவு என்று பாராமல், மக்கள் எப்போதும் அச்சத்துடனே நடமாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்க, தான் சட்டம் ஒழுங்கை சிறப்புற காத்து வருவதாக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண். புஷ்பநாதன் படுகொலை செய்தோரை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? கடலூர் முன்னாள் கவுன்சிலரும், அதிமுக மாவட்ட பிரதிநிதியான புஷ்பநாதன், கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு புஷ்பநாதன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது, அவரை பின்தொடர்ந்த கும்பல் ஓட ஓட புஷ்பநாதனை சரமாரியாக அாிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை செய்தவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "விக்கிரவாண்டிக்கு வெளிமாநில தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! - Vikravandi by election

ABOUT THE AUTHOR

...view details