கோயம்புத்தூர்:சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. இருந்தும் அதிமுகவை திட்டமிட்டு குறை சொல்லி அண்ணாமலை பேசியுள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி, அவரது கணிப்பு அப்படி உள்ளது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். 2ம் இடத்தில் அதிமுக தான் உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்திதனர்.
அப்போது அண்ணாமலை எங்கள் கூட்டணியில் தான் இருந்தார். அவருக்கும் இது நன்றாகத் தெரியும். இருந்தும் அதிமுக நிலைபாடு குறித்து இப்படி சொல்வது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல. இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் திமுக வை விட குறைவாக பெற்றுள்ளார். பின் எப்படி வளர்ந்துள்ளது என கூற முடியும்.