தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை" - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்! - Edappadi Palaniswami

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான், இனி எந்தக் காலத்திலும் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் (கோப்புப்படம்)
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 7:55 AM IST

சென்னை: சென்னை முகப்பேர் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116வது பிறந்த நாளையொட்டி அதிமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் தினந்தோறும் பத்திரிகைகளில் பாலியல் கொடுமைகள் அரங்கேறும் செய்திகள் தான் வருகின்றன. அதிமுக ஆட்சியில் ஒரு வருடத்திற்கு 9 பாலியல் வன்கொடுமைகள் தான் நடந்தன. ஆனால், திமுக ஆட்சியில் 20 நாட்களில் 8 பாலியல் வன்கொடுமைகள் நடந்துவிட்டன.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால் மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாததால் படுகொலைகள் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க:"2 புடவை, 2 ஜாக்கெட்டுடன் வந்து எம்பியாகிவிட்டார்" - கூட்டணி கட்சி எம்பி குறித்து எஸ்.கல்யாணசுந்தரம் பேச்சு!

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத அவலநிலை திமுக ஆட்சியில் தொடர்கிறது. கள்ளக்குறிச்சியில் காவல் நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள். அரசு கொடுத்த தவறான தகவல்களால் 68 உயிர்கள் அங்கு பறிபோய் விட்டன.

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு தங்கள் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து இரட்டை வேடம் போடுகிறார்கள். திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் கின்னஸ் சாதனை படைத்தவர் மு.க.ஸ்டாலின். இவர்கள் ஆட்சியில் எல்லாவற்றுக்கும் விளம்பரம் தான்.

திமுக ஆட்சியில் இதுவரை 50க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்துவிட்டனர். அந்தக் குழுவினர் என்ன செய்கிறார்கள் என்பதை அறியவே தற்போது ஒரு குழு அமைக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மகன் உதயநிதி கார் ரேஸ் நடத்துகிறார், அப்பா ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுகிறார்" என கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக மிகவும் கட்டுக்கோப்பான கட்சி, அதற்கு எதிராக இங்கு யாரும் செயல்படவில்லை. வேண்டுமென்றே வதந்தியைப் பரப்புகிறார்கள். அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான். இனி எந்த காலத்திலும் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

திமுக கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. விரைவில் அது வெடித்துச் சிதறும். கூட்டணி இல்லையென்றால் திமுக ஆட்சி இல்லை. 2026இல் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details