தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு.. வேடிக்கை பார்க்கும் திமுக அரசு" - ஈபிஎஸ் கண்டனம்! - Edappadi Palaniswami

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 1:14 PM IST

சென்னை:தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும், அதில் குழந்தைகள், முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறுவதாகவும் செய்திகள் வந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.

மேலும், அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை. ஒருசில அரசு மருத்துவமனைகளில் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்குப் போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க வேண்டுமென்று. பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகள் கழிவுநீரால் நிரம்பி வழிவதாகவும், அவை முழுமையாக அகற்றப்படாத நிலையில், அரசு மருத்துவமனைகளே நோய்களை உருவாக்கும் கூடாரங்களாக மாறி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்: அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இதனால் மிகவும் பாதிப்படைகின்றனர்.தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கும் நிலையில், காய்ச்சல் முகாம் நடத்துதல், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுத்தல், பழைய டயர், பாத்திரங்களில் மழைநீர் தேங்காமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:அதிமுக வாக்குகள் சரிய இதுதான் காரணமாம் - ஈபிஎஸ் சொல்வதை கேளுங்க!

மக்கள் குற்றச்சாட்டு:மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து தெளித்தல், கழிவு நீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற எந்தவித முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளாமல், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாமல் இருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யாமல் சப்பைக் கட்டு கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது வேதனையளிக்கிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்துப் பொருட்களை மொத்தமாக வாங்கித் தராததால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தேவையான ஆன்டிபயாட்டிக் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அனைத்து மருந்துப் பொருட்களும் முழுமையாக இருப்பதை சுகாதாரத் துறை அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்.

நோய் நாடி, நோய்முதல் நாடி: மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்கள் அதிகமாக பரவி உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details