சேலம்:2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை, திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (மார்ச் 24) தொடங்க உள்ள நிலையில், இன்று (மார்ச் 23) அவர் சேலம் வந்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விக்னேஷை அறிமுகம் செய்து வைத்த அவர், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் இருந்து நகர, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான உரிய வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு வழங்கினார்.
தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் திமுக, பாமக, அமமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த 500 பேருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாற்று கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணைந்து கொண்டவர்களுடன், எடப்பாடி பழனிசாமி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் அன்புமணி வேடந்தாங்கல் பறவை போல, தண்ணீர் வற்றினால் பறந்து விடுவார். தண்ணீர் இருந்தால் வருவார். பாமக, தமிழகத்தில் கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என்ற நிலையில் உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாரதிய ஜனதா ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுத்தார், தற்போது அக்கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளார்.