தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி விவகாரம்; 'உயிர்பலி அதிகரிக்க கலெக்டரும் காரணம்..காங்கிரஸ் வாய்த் திறக்குமா?' - ஈபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு - Kallakurichi Illicit Liquor issue - KALLAKURICHI ILLICIT LIQUOR ISSUE

Illicit Liquor In Kallakurichi issue in TN Assembly: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட ஆட்சியரும் ஒரு காரணம் எனவும், மெத்தனப்போக்கான அரசைக் கண்டும் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகைப்படம்
சட்டப்பேரவை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 1:29 PM IST

சென்னை: நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி விவகாரம்; பேச அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு:இக்கூட்டத்திற்கு 2வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர், ஆரம்பத்திலேயே கள்ளச்சாரய விவகாரம் பற்றி பேச சபாநாயகரிடம் முறையிட்டனர். ஆனால், சபாநாயகர் அதிமுகவின் கோரிக்கை ஏற்க மறுத்தார். மக்கள் பிரச்சனைகளை பேசும் நேரத்தில், உங்கள் நெருக்கடியை காண்பிக்காதீர்கள் என்றும், கேள்வி நேரம் முடிந்தவுடன் அனுமதி தரப்படும் எனவும், எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்வது ஏற்புடையது இல்லை என்றார்.

மேலும், இது குறித்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதி மறுத்ததாகவும் அவையைப் புறக்கணித்தனர். இந்நிலையில், சட்டப்பேரவை விதிகளின் படி முதல் 1 மணி நேரம் வினாக்கள் விடை, அதன் பிறகுதான் நேரமில்லா நேரம் எனவும் கூறினார். இதுபோல, மீண்டும் அதிமுகவினர் செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

மெத்தனப்போக்கான அரசு - ஈபிஎஸ்:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவாகரத்தில் சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை. மது குடித்தவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும், சிகிச்சை பெறுபவர்கள் நிலை என்ன? என்பது குறித்து அறிய பேச அனுமதி கேட்டோம். ஆனால், சபாநாயகர் அனுமதி தரவில்லை.

கள்ளச்சாராயத்தின் உயிரிழப்பு தொடர்பாக தற்போது வந்த தகவலின் படி, 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 183 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வருகிறது. இதில், அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கிறது.

தவறான கருத்தைக் கூறிய அமைச்சர்? உண்மையை மறைத்த கலெக்டர்:கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளார். கள்ளசாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக வந்ததால்தான் மரணம் எனக் கூறுகிறார். அதற்கு காரணம் என்ன? இந்த அரசாங்கம் தான். கள்ளச்சாராய விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரே உண்மையை சொல்லவில்லை. கள்ளச்சாராயம் என்பது வதந்தி எனக் கூறியதால் தான், தற்போது பலரது உரியிரிழப்புக்கும் காரணம்.

இறப்புகள் அதிகரிக்க கலெக்டரும் ஒரு காரணம்:அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது பச்சைப்பொய். கள்ளச்சாராயத்திற்கு விஷ முறிவு மருந்துகள் அரசு மருத்துவமனையில் இல்லை எனக் குற்றம்சாட்டினார். கள்ளச்சாராயம் குடித்து தாமதமாக வந்ததால் உயிரிழப்பு என்கிறார்கள்; அதற்கு அரசுதான் காரணம். மேலும், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் அனைவரையும் வெவ்வேறு காரணங்களால் இறந்ததாககவும், உயரிழந்தவர்கள் கள்ளச்சாராயத்தால் இறக்கவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் கூறிய தவறான தகவல்தான் கள்ளச்சாராய மரணம் அதிகரிக்கக் காரணம்.

குற்றவாளிகளை சிபிஐ தான் கண்டுபிடிக்க வேண்டும்:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் முதலமைச்சருக்கு தெரியாது எனக் கூறுவது ஏற்க முடியாது. இப்படி தெரிவித்தால் எதற்காக முதலமைச்சர்? திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இதில் தொடர்பு உள்ளது என மக்களே கூறுகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ (CBI) விசாரணை செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரு நபர் விசாரணையில், உண்மை வெளிவராது.

கள்ளக்குறிச்சி விவகாரம்; மௌனம் காக்கும் காங்கிரஸ்:மக்களின் உயிர் சென்று கொண்டிருக்கிறது, இதை விட முக்கியப் பிரச்சனை என்ன உள்ளது? கடந்த காலத்தில் சட்டப்பேரவையில் திமுகவினர் எப்படி நடந்து கொண்டார்கள்? என அனைவருக்கும் தெரியும். தற்போது, திமுகவுடன் காங்கிரஸ் 25 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்துள்ளதால், திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் பேச மறுக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 'பிங்க் ஆட்டோ' - அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details