சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 100க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகியவற்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 19 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இது போன்ற சம்பவம் ஏற்படாதவாறு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி போலீசார் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகருக்கு கள்ளச்சாராய விவகாரத்தால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.