சேலம்: சேலம் மாநகர் தாதகாப்பட்டி மைதானத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று (பிப்.25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; அது கட்சி அல்ல. கட்சிக்கு உண்டான தகுதி அதிமுகவுக்குத் தான் உள்ளன. நீட் தேர்வு ரத்து (NEET Exam) செய்ய பல லட்சக்கணக்கான கையெழுத்து வாங்கிய அஞ்சல் அட்டைகள் காற்றில் பறந்து குப்பைத் தொட்டிக்குப் போனது. இதுதான் நீட் தேர்வு ரத்து செய்யும் லட்சணம்.
திமுக பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பிரச்னைகளைப் பற்றி கவலைப்படாமல் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சேலத்திற்கு வந்து பாருங்கள். 2011-க்கும் இப்போதைக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்காலம் என பொதுமக்கள் பேசுகின்றனர். ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் செய்யும் வகையில் அம்மா கிளினிக்-ஐ (AMMA CLINIC) மூடியதுதான் திராவிட மாடல் திமுக அரசின் சாதனை. சேலம் திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் திட்டத்தினை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்ததுதான் திமுகவின் சாதனை.
திமுக 4 முறை அறிவித்த பட்ஜெட்டில், 3 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. கடன் வாங்குவதில் இந்தியாவின் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த கடன் சுமை, தமிழக மக்கள் மீதுதான் விழும். ஊழல் செய்வதில் நம்பர் 1 மாநிலம் தமிழகமாக உள்ளது.