சென்னை:ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் (NCB) கைது செய்து விசாரணைக்குப் பின் டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜாபர் சாதியின் கூட்டாளிகள் உட்பட ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூ.2000 கோடிக்கு மேல் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஜாபர் சாதிக் வீடு அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில், முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜாபர் சாதிக் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் முறைகேடாக ஈட்டிய வருமானத்தை யாருக்கு எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் மூன்று நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியதோடு, அவர் அளித்துள்ள வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவருக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனாவிடம் விசாரணை நடைபெற்றது.