கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி மற்றும் கட்டுமானம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், முறையாக வரி செலுத்தவில்லை என 2022 மட்டும் 2023 ஆம் ஆண்டு இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர். இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (நவ.14) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூர், வெள்ளை கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்டின் இல்லம், மார்டின் குழும அலுவலகம் மற்றும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்க துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஓபிஜி குழுமத்தில் கட்டுகட்டாக பணம்; அமலாக்கத்துறை சோதனையில் பிடிபட்டது எப்படி?
இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது. இரண்டவாது நாளான இன்று மார்ட்டின் மனைவி லீமா ரோஸின், தங்கை அந்தோணியா மற்றும் அண்ணன் ஜான் பிரிட்டோ இல்லங்களிலும் அமலாக்க துறை சோதனை செய்து வருகின்றனர்.
சாய்பாபா காலனி பகுதியில் உள்ள லீமா ரோஸ் தங்கை இல்லத்திலும், சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள லீமா ரோஸ் அண்ணன் இல்லத்திலும் அமலாக்க துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கோவையில் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனை 5 இடங்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அமலாக்கத்துறை மார்ட்டின் குழும நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 400 கோடி வரை சொத்துகள் முடக்கப்பட்டு இருந்தது.
அப்பொழுது கைப்பற்றப்பட்டிருந்த ஆவணங்களின் அடிப்படையில், தற்போது மீண்டும் அமலாக்க துறையினர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த சோதனை இன்று நிறைவடையும் எனவும் கூறப்படுகின்றது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் ஐந்து இடங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு உதவியாக உள்ளூர் போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்