சென்னை: ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அவரது சகோதரரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதை உறுதி செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 55.30 கோடி மதிப்புள்ள சொத்துகளை பண மோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் முடக்கியுள்ளனர்.
இதில், 14 அசையா சொத்துகள் அடங்கும். மேலும், ஜேஎஸ்எம் (JSM) ரெசிடென்சி, சொகுசு பங்களா, ஜாகுவார், மெர்சிடிஸ் (Mercedes) உள்ளிட்ட 7 சொகுசு வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.