டெல்லி:வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தார், திண்டுக்கலைச் சேர்ந்த சூர்யமூர்த்தி. அவர் அளித்த அந்த மனுவில், “அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திற்கு 2017 முதல் 2022ஆம் ஆண்டும் வரை புகார்கள் அளித்துள்ளேன்.
உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை, அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.
அதன் காரணமாக, சூர்யமூர்த்தி தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.