தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் மறுப்பு - தேர்தல் ஆணையம்! - VCK symbol - VCK SYMBOL

VCK symbol: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

VCK symbol
VCK symbol

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 7:35 PM IST

சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில், மொத்தம் 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி 4 சட்டமன்றத் உறுப்பினர்களையும், 1 நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று வரை, இந்திய தேர்தல் ஆணையம் பொதுச் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

ஐந்து மாநிலங்களில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கட்சியின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறாத காரணத்தால், பொதுச் சின்னத்திற்கான உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க இயலவில்லை என கடந்த மார்ச் 3ஆம் தேதி கடிதம் மூலம் தெரிவித்த தேர்தல் ஆணையம், கோரிக்கையை நிராகரித்தது.

அதனைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் வாக்குகளை உரிய தரவுகளுடன் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தது. மேலும், கட்சி சின்னம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிடடுள்ள அறிக்கையில், “இது முதற்கட்ட வெற்றிதான். நமது கட்சியின் அரசியல் அங்கீகாரத்திற்கான சட்டப் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சுமூகமாக பொதுச் சின்னத்தை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், விடுதலைச் சிறுத்தைகளுக்கு பொதுச் சின்னம் வழங்குவதில் மட்டும் இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

இனியாவது இந்திய தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கிடைக்க வேண்டிய பொதுச் சின்னத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கனிமொழி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - முழு விவரம்! - Affidavit Details Of Candidates

ABOUT THE AUTHOR

...view details