தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஈவிஎம் மெஷினை ஹாக் செய்ய முடியும்" - துரை வைகோ கூறியது என்ன?

MDMK Durai vaiko: ஈவிஎம் மெஷின் (EVM Machine) ஹாக்கிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும் எனக் கூறுகிறது, என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

durai vaiko
துரை வைகோ

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 9:15 PM IST

சென்னை:2024 நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை, எழும்பூரில் மதிமுக சார்பில் 'இளையோர் தேர்தல் பயிலரங்கம்' நடத்தப்பட்டது.

மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் அடங்கிய 11 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ பேசுகையில், "தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கும் மத்திய அரசுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில் 1000க்கும் மேற்பட்ட மதிமுகவைச் சேர்ந்த இளைஞர்களிடம் இளையோர் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரைத் தேர்தல் தொகுதி பேச்சு வார்த்தை நேரங்களில் சில முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இரண்டு வாரங்களில் இது ஒரு சுமுகமான சூழலை எட்டும் என நாங்கள் நம்புகிறோம். இந்தியா கூட்டணி மட்டும் இல்லலை, பாஜக கூட்டணியில் கூட சலசலப்பு உள்ளது எனவே தேர்தல் நெருங்க நெருங்க ஒரு சுமுகமான சூழல் ஏற்படும்.

இந்தியா கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விலகலால், இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நிதிஷ்குமார் மீது எங்களுக்கு ஆரம்பம் முதலே சந்தேக பார்வை இருந்தது. இன்று நாட்டில் உள்ள அனைத்து பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. நாட்டில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகி உள்ளனர்.

நாட்டில் விலை உயர்வுக்குக் காரணம் மத்திய அரசுதான். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால் மட்டுமே ராமர் கோயிலைத் திறந்துள்ளனர். ராமர் கோயிலைக் கட்டியதன் மூலம் மதவாத அரசியலை நடத்தி, வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் பாஜக அரசு உள்ளது.

ஈவிஎம் மெஷின் (Evm Machine) ஹாக்கிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று கூறுகிறது. ஜிஎஸ்டி வந்த பின் ஆண்டு ஒன்றுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை, மக்கள் நலத்திட்டம் தாமதமாகக்கூடாது என்பதற்காக அந்த நிதியைத் தமிழக அரசே செலவு செய்து வருகிறது. இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பும் கேட்டுள்ளோம். மேலும் கூடுதலாக ஒரு நாடாளுமன்றத் தொகுதி கேட்டு உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட வேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details